|
அத்தியாயம்-52 ஸ_ரத்துத் தூர் (மலை) அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 52:1. தூர் (மலை) மீது சத்தியமாக! 52:2-3. விரித்து வைக்கப்பட்ட, ஏட்டில் எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக! 52:4. பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக! 52:5. உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக! 52:6. பொங்கும் கடலின் மீது சத்தியமாக! 52:7. நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும். 52:8. அதனைத் தடுப்பவர் எவருமில்லை. 52:9. வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில், 52:10. இன்னும், மலைகள் தூள் துளாகி விடும் போது, 52:11. (சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான். 52:12. எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ, 52:13. அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர். 52:14. அந்நாளில்; (அவர்களுக்குக் கூறப்படும்:) ''நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான். 52:15. ''இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா? 52:16. ''நீங்கள் அதில் நுழையுங்கள், பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள், (இரண்டும்) உங்களுக்குச் சமமே, நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்த வற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்."" 52:17. நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள். 52:18. அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான். 52:19. (அவர்களுக்குக் கூறப்படும்:) ''நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்."" 52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹ_ருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம். 52:21. எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியனரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான். 52:22. இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம். 52:23. (அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர், ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை. 52:24. அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள், அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்). 52:25. அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள். 52:26. ''இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம். 52:27. ''ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான். 52:28. ''நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன், பெருங்கிருபையுடையவன்."" 52:29. எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர், பைத்தியக்காரருமல்லர். 52:30. அல்லது: அவர்கள் (உம்மைப் பற்றி, ''அவர்) புலவர், அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்து இருக்கிறோம்"" என்று கூறுகிறார்களா? 52:31. ''நீங்களும் வழி பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன்"" என்று (நபியே!) நீர் கூறும். 52:32. அல்லது, அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா? 52:33. அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள். 52:34. ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும். 52:35. அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா? 52:36. அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள். 52:37. அல்லது, அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா? 52:38. அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும். 52:39. அல்லது, அவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண் மக்களுமா? 52:40. அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா, 52:41. அல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா, 52:42. அல்லது, அவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள். 52:43. அல்லது, அவர்களுக்கு அல்லாஹ் அல்லாமல் (வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன். 52:44. வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள். 52:45. ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக. 52:46. அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். 52:47. அன்றியும், அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள். 52:48. எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திறுப்பீராக, நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹ{ செய்வீராக, 52:49. இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹ{ செய்வீராக! 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |